எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயங்கும் அமைப்பில், ரூ.350 கோடி ஊழல் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில், மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.அருண் சவுத்ரி அவர்கள், அரசுத் துறையில் ஊழல் கொடூரமாக வளர்ந்து விட்டது, அடிப்படை வசதிகளை பெறக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அரசுத்துறை லஞ்சம் ஊழலை வெகுவாக சாடிய, மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.அருண் சவுத்திரி, ‘அரசுத் துறையில் நிலவும் லஞ்சத்தை ஒழிக்க, மக்கள் வரி செலுத்தாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
சுயநல நோக்கோடு, குறுக்கு வழியில் புகுந்து, எப்படியாவது தனக்கு ஆதாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று பலரும் விரும்புவதால் தான், இன்று லஞ்சமும், ஊழலும் எல்லா துறைகளிலும் பரவிக் கிடக்கிறது. இளைஞர் சமுதாயத்தால் மட்டுமே, இந்த சமூகத் தீமையிலிருந்து நாட்டை மீட்க முடியும்.
‘அரசு அலுவலர்கள் மீது ஊழல் புகார் வந்தால், உடனடியாக விசாரணை நடத்தி வழக்கும் பதிவு செய்ய வேண்டும்’ என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இப்போது ‘அரசின் அனுமதி பெறாமல் அரசு ஊழியர் யார்மீதும் லஞ்ச வழக்கு போட முடியாது’ என்று தமிழக தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். இது அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் காப்பாற்றும் முயற்சி.
இளைஞனே, லஞ்சமும் ஊழலும் உன்னுடைய பிரச்சனை இல்லை என்று நினைக்கிறாயா? இந்த சமூக தீமையினால், உன் பக்கத்து வீடு தீப்பற்றி எரியும்போது, உன் வீடு தீப்பற்ற எவ்வளவு நேரமாகும்? நீ எவ்வளவு படித்தாலும், பட்டம் பெற்றாலும் இந்த லஞ்சமும் ஊழலும் உன் கனவுகளை எல்லாம் அழித்துவிடும்.
இளைஞனே, சமுதாயத்தில் நிலவும் லஞ்சமும் ஊழலும் உன்னை பாதிக்கும் போது தான், அது எந்த அளவு கொடூரமானது என்று தெரியும். உன் படிப்பிலே, உன் வேலை வாய்ப்பிலே, நீ உண்ணும் உணவிலே, மருத்துவமனையிலே, நீ பயணிக்கிற சாலையிலே, குடிக்கிற தண்ணீரிலே, ஏன் சுவாசிக்கிற மாசுபட்ட காற்றிலே கூட ஊழல் இருக்கிறது.
விஜய மோகனாஜி,
பொதுச் செயலாளர். விடியல் வளர்ச்சி பேரணி.