லஞ்ச ஊழலால் தடிப்பறிக்கப்படும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு
விடியல் வளர்ச்சி பேரணி, இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. தமிழக அரசியலிலே ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வெண்டும் என்ற நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம். அரசியலிலே தூய்மையும், வெளிப்படைத் தன்மையும், நியாயமும், நேர்மையும் நிலவ வேண்டும் என்பதே கொள்கை. எங்களுக்கு அரசியல் சித்தாந்தங்கள் இல்லை. நாங்கள் பொதுவுடமை தோழர்களும் அல்ல. தனியார் மய ஆதரவாளர்களும் அல்ல. உலக மயமாக்கல் ஆதரவாளர்களும் அல்ல. அரசு சேவைகள் லஞ்சம், ஊழல் இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுடைய திறமையான நிர்வாக செயல்பாடுகள் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதே கொள்கை.
வேலை வாய்ப்பில் தமிழகம் முன்னேற வேண்டுமானால், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் நிறுவப்பட வேண்டும். லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி இங்கே நடந்தால், ஏராளமான இளைஞர்கள் தொழில் துவங்க முன்வருவார்கள். குறைந்த முதலீட்டில் அதிக வேலை வாய்ப்பை தருவது சிறு தொழில்கள்தான். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் நசிந்துவிட்டன. பலலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் மின்சார பற்றாக்குறை, தொழில்துறையை ஊக்குவிக்காத ஆட்சியாளர்கள்.
மாணவர்களுக்கு கல்வி பெறும் உரிமை இருப்பதுபோல, இளைஞர்களுக்கு வேலை பெறும் உரிமை வேண்டும். ஜாதி, மத வித்தியாசமில்லாமல் அனைத்து ஏழைகளுக்கும் வேலைவாய்ப்பும், குடியிருக்க வீடும் வழங்கப்பட வேண்டும் என்பதே நம் கொள்கை. இது சாத்தியமா? என்றால், 100% சாத்தியமே. உலகின் சிலநாடுகளில் அரசு இதுபோன்ற திட்டங்களை மக்களுக்கு அளிக்கின்றது.
இந்தியாவுக்கு அருகே உள்ள மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் அரபு நாடுகளில் விவசாய வளம் இல்லை. வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மட்டுமே கொண்டு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறார்கள். விவசாயம், தொழில், வியாபார வளங்கள் கொண்ட தமிழகத்தில் ஏன் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. லஞ்சம், ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மைதான் காரணம்.
நாம் விவசாயம், தொழில், வியாபாரம் ஆகிய இம்மூன்று துறைகளையும் மிகுந்த கவனத்தோடு வளர்ப்போம். இந்த துறைகளில் சாதித்த பல வல்லுனர்களின் ஆலோசனைகளைக் கொண்டு, இதனை கட்டமைப்போம். அதன் மூலம் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை அடியோடு போக்க வேண்டும்.
அரசு வேலை வாய்ப்புகள் என்றாலே அங்கே லஞ்சமும், ஊழலும் கை கோர்த்துக் கொள்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருந்ததால் தானே, வேளாண் அதிகாரி முத்துகுமார சுவாமியை தற்கொலைக்கு தள்ளியது. தேவையில்லாத பொருட்களை இலவசமாக வழங்கிவிட்டு, இளைஞர்களுக்கு அத்தியாவசிமான அரசு வேலைகளுக்கு விலை வைத்திருக்கிறார்கள்.
560 பொறியியல் கல்லூரிகளுடன் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ஆனால் வேலை வாய்ப்பை பெறுவதில் தமிழ்நாடுதான் கடைசி இடத்தில் இருக்கிறது. பீகார், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற பின் தங்கிய மாநிலங்கள் கூட வேலை வாய்ப்பை பெறுவதில் நமக்கு முன்னால் இருக்கின்றன. காரணம் தமிழகத்தில் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு, கல்வித்தரம், பரிசோதனை வசதிகள் ஆகியவை மிக மோசம். ஆசிரியர்களும் குறைவு. அதிலும் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இங்கே கல்வி நிலையங்களின் நோக்கம் பணம் பறிப்பது ஒன்றுதான். கல்வி நிலையங்கள் கொள்ளை நிலையங்கள் ஆனதற்கு காரணம் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு சாதகமான அதிகாரிகளும் நடத்தும் கூட்டுக் கொள்ளைதான்.
எல்லா அரசு வேலைகளுக்கும் இங்கே விலை உண்டு. பணம் உள்ளவனுக்கே அரசு வேலை என்பது எழுதாத சட்டம். பெயரளவுக்கு எழுத்து தேர்வும் நேர்முகத் தேர்வும் நடக்கிறது. மறை முகமாக அந்த வேலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஏழைகளுக்கும், நேர்மையாளர்களுக்கும் அரசு வேலை கிடையாது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய அரசு ஊழியர்கள், தாங்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
வேலை வாய்ப்பை உருவாக்க. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.டி.பார்க் ஏற்படுத்த என்று கட்டிடங்களை கட்டினார்கள். ஐ.டி.கம்பெனிகள் வந்ததா? இல்லை. யாருக்கேனும் வேலை கிடைத்ததா? அதுவும் இல்லை. கட்டிடங்கள் கட்டியதில், கமிஷன் பெற்று காசு பார்த்துவிட்டார்கள். மக்கள் வரிப்பணம் வீணானதுதான் மிச்சம். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில், தொழில் ஆரம்பிக்க எந்த ஐ.டி. கம்பெனி வரும்? இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாமல்தான் இங்கே ஆட்சி நடக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர் மாநாடு ரூ.100 கோடி செலவழித்து ஆடம்பரமாக தமிழ்நாட்டில் நடத்தினார்கள். ஏற்கனவே குஜராத், மேற்கு வங்காளம், பீகார் இன்னும் பிற மாநிலங்களில் இது போன்ற வெளிநாட்டு தொழில் முனைவோர் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இதில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறும் காகித ஒப்பந்தமே. இங்கே, தமிழ்நாட்டில் வெளிநாட்டார் தொழில் துவங்குவதற்கான எந்த அடிப்படை கட்டமைப்புகளும் இல்லை என்பது சென்ற டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை மிதந்தபோது அகில உலகிற்கும் தெரிந்து விட்டது. அதோடு தமிழகத்தில் நிலவும் லஞ்சமும் ஊழலும் இந்தியா முழுவதும் அறிந்த ஒன்று. தமிழக முதல்வரே லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் ஒவ்வொரு கோர்டாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மற்ற அதிகாரவர்க்கம் எப்படி இருக்கும்? லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகம் ஏற்படாதவரை இங்கே தொழில் வளர்ச்சி ஏற்படாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அதாவது 2011-2014 வரை, ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் பேருக்கு வேலை கிடைக்க, 33 நிறுவனங்களோடு, ரூ 31706 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்களாம். அதில் எந்த முதலீடும் கிடைக்கவில்லை. யாருக்கும் வேலையும் கிடைக்கவில்லை. லஞ்சம், ஊழல் இலலாத, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலத்தில்தான் முதலீடுகள் வரும். வேலை வாய்ப்பும் பெருகும்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, படித்த ஒவ்வொருவருக்கும் இங்கே வேலை கிடைத்தாக வேண்டும். பிறந்து வளர்ந்த இடத்தில் வேலையில்லாமல் பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் வேலைதேடிப் போக தமிழன் என்ன அகதியா? இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாத அரசு இங்கே எதற்கு?
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தராத அரசை இளைஞர்கள் தூக்கி எறிய வேண்டும். படிக்க வேண்டியது இளைஞர்கள் கடமை. வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. வேலை கேட்பது இளைஞர்கள் உரிமை. கடமையை செய்யாத அரசு எதற்கு?
தரமான கல்வி, வேலை, அடிப்படை வசதிகள் தராமல் வரி வசூலிக்க மட்டும் தான் அரசா? நியாயமான கட்டணத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கிறதா? வேலை கிடைக்கிறதா? விலைவாசிகள் கட்டுக்குள் இருக்கிறதா? எதுவும் இல்லை. இளைஞர்களின் எழுச்சி ஒரு மாற்று அரசை உருவாக்க வேண்டும்.
மா.விஜய மோகனாஜி,
விடியல் வளர்ச்சி பேரணி
vijaimohan.das@rediffmail.com