மழையினால் உற்பத்தி பாதிப்பு
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை சென்னைவாசிகள் பலரையும் என்றென்றும் மறக்க முடியாத துயரத்தை அளித்தது. கனவுகளோடு வாங்கிய வீடுகள் எந்த அளவுக்கு வாழத் தகுதியற்ற இடத்தில் உள்ளது என்பதை கண்கூடாக கண்டனர். இழந்த உறவுகளும் பொருட்களும் உடமைகளும் என்றும் மறக்காது.
பொது மக்களின் துயரம்தான் இப்படி என்றால் தொழில்துறையினரின் துயரங்கள் இதையும் விட கூடுதலாக இருக்கும் போலிக்கிறது. உதாரணமாக சமீபத்திய மழை அம்பத்தூர் தொழில் பேட்டையை சூழ்ந்து மூழ்கடித்தது. அம்பத்தூர் தொழிற்பேட்டை சுமார் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 8000க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டது.
எல்லா உற்பத்தி கூடங்களிலும் இரண்டு அடி உயரத்திற்கு மழைத் தண்ணீர் நிற்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சங்கள் விலை மதிப்புள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இவைகள் மீண்டும் இயங்குமா என்பது கேள்விக்குரியே. மேலும் ஒரு மாத காலமாக உற்பத்தி முடக்கம். தொழிற்சாலை இயங்காத போதும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டிய நிலை. உதிரிபாகங்கள் ஒற்றுமதி செய்யும் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் பொருட்கள் சப்ளை செய்யாவிடில் ஆர்டர் கைவிட்டுப் போகும்நிலை. இப்படி பலமுனை தாக்குதல்களால் தொழில் முனைவோர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை இந்த அளவு பாதிப்படைய காரணம் அம்பத்தூர் ஏரியின் உபரிநீர் செல்லக்கூடிய நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வீடுகள் தோன்றிவிட்டன. எனவே உபரிநீர் தொழிற்பேட்டையில் நுழைந்து வெளியேற வேண்டிய நிலை. அதிகாரிகள் அரசுத்துறையினரின் லஞ்சம் ஊழல் அலட்சியம் பொறுப்பற்ற தன்மை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பெரும் தொழிற் பேட்டையையே மூழ்கடித்து விட்டது. ஊழலை ஒழிக்க இளைஞர் ஒன்றுபட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
“அதிகாரிகளின் லஞ்சப்பசிக்கு என்னால் தீனி போட முடியவில்லை. அவர்களுடைய நச்சரிப்பு தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் கடந்த நவம்பர் மாதம் தாணே நகரில்.