சென்னையில் சுகாதாரம்

சென்னையில் சுகாதாரம்

சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி தொடங்கி இருபது நாட்களுக்கும் மேலாக விட்டு விட்டு பெய்த வரலாறு காணாத கன மழை தற்போது சற்றே ஒய்திருக்கும் நிலையில் துப்புரவு பணிகள் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் சுயநல நோக்கோடு அவைகளில் பலவற்றை அழித்ததோடு அல்லாமல் இருக்கின்ற சில ஏரிகள் ஆறுகள் கால்வாய்களையும் சரியாக பராமரிக்காமலும் ஆழப்படுத்தி தூர்வாரி கரைகளை பலப்படுத்தாமலும் இருந்ததால் மிகுந்த வெள்ள சேதத்தையும் ஏற்படுத்தி கிடைத்தற்கரிய மழைநீர் வீணாக கடலில் கலந்தது. அரசியல் வாதிகளின் பேராசையாலும் ஊழலினாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.

சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் தேங்கிய மழைநீர் சாக்கடை நீர் மற்றும் குப்பைகளுடன் கலந்து எங்கும் துர்நாற்றம் வீசுகிறது. சாலைகள் இருபுறமும் மலையென குப்பைகள் சேர்ந்து கிடக்கின்றன. மழைவெள்ளத்தால் இறந்துபோன விலங்குகள் எலிகள் போன்றவை குப்பைகளோடு சேர்ந்து பெரும் நாற்றம் எடுக்கிறது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது உணவுப்பிரச்சனை இல்லை என்றாலும் அவர்களின் பெரும் பிரச்சனையே இயற்கை உபாதைகளை கழிப்பது சம்பந்தப்பட்டவையே. அதிலும் பெண்கள் படும்பாடு சொல்லிமாளாது. அரசு இதுபோன்ற சுகாதார பிரச்சனைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். சுகாதார பிரச்சனைகளுக்கு போர்கால நடவடிக்கை எடுக்காவிடில் காய்ச்சல் சளி இருமல் வாந்திபேதி போன்ற பல தொற்றுநோய்கள் பரவிவிடும். எனவே அரசு உடனடியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கடலூர் காஞ்சிபுரம் திருவள்ளர் மாவட்டங்களில் தூய்மை பணியை முடுக்கிவிட்டு போதுமான மருத்துவர்களை அனுப்பி தொற்றுநோய்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கவேண்டும்.

தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த இளைஞர்களின் சேவைகளை வரவேற்கிறோம்.
விடியல் வளர்ச்சி பேரணி
விஜய மோகனாஜி

Comments are closed.